வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கெனவே பல திரைப்படங்களும் ஆவணப்படங்களும் வெளியாகியுள்ள நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘கூச முனுசாமி வீரப்பன்’ ஆவணத் தொடர் தனி கவனம் பெற்றது. வீரப்பன் உயிருடன் இருந்த காலகட்டத்தில் அவரை நேரடியாக சந்தித்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபல் மற்றும் அவரது குழுவினரின் மேற்பார்வையில் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது.
ஆர்.வி. பிரபாவதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கிய இத்தொடர், 2023-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. வீரப்பனின் இதுவரை வெளியாகாத நேர்காணல் காட்சிகள் இதில் இடம்பெற்றிருந்தது பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், இந்த ஆவணத் தொடருக்கு ஆரம்பத்திலேயே அதிக வரவேற்பு கிடைத்தது.
முதல் பாகத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது ‘கூச முனுசாமி வீரப்பன் 2’ தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், மறைந்த நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான பல புதிய தகவல்கள் இடம்பெற உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய விதம், அதன்பிறகு நடைபெற்ற முக்கியமான சம்பவங்கள் மற்றும் இதுவரை பொதுவெளிக்கு வராத வீடியோ, புகைப்படங்கள் ஆகியவை இரண்டாம் பாகத்தில் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் புதிய பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
