2012-ம் ஆண்டு வெளியான ‘நான் ஈ’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றவர் கிச்சா சுதீப். அதன்பிறகு அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பான் இந்தியா முறையில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான ‘மேக்ஸ்’ திரைப்படம் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், ‘மார்க்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குநர் அனூப் பண்டாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பில்லா ரங்கா பாட்ஷா’ திரைப்படத்தில் சுதீப் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற மன்னர் கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய திரைப்படத்தில் கிச்சா சுதீப் தேவராயர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தேவராயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இயக்குநர் குறித்த தகவல் தற்போது வெளியாகவில்லை.
எனினும், படத்தின் வெளியீட்டு ஆண்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘தேவராயா’ திரைப்படம் 2027-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் கிச்சா சுதீப் நடிக்கும் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
