இயக்குநர் பி. வாசுவின் மகனான சக்தி, தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக, ‘தொட்டால் பூ மலரும்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்புத் திறமைக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன.
ஒருகட்டத்தில் திரையுலகில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்ததால் நடிப்பில் இருந்து விலகியிருந்த சக்தி, பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார். தற்போது ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், அப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.
இதனிடையே, ‘அனலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘குஜிலி கும்பா’ பாடலில் சக்தியின் உடை மற்றும் தோற்றம் இணையத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளானது. அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது உடற்பயிற்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், ‘கராத்தே பாபு’ படத்திற்காகவே இந்த மாற்றத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.மேலும், தன்னை விமர்சிப்பவர்களின் கருத்துகளே தனது முயற்சிக்கு ஊக்கமாக இருப்பதாகவும், இதுபோன்ற விமர்சனங்களை ஏற்கெனவே பலமுறை சந்தித்துள்ளதாகவும் சக்தி குறிப்பிட்டிருந்தார். யாரையும் காயப்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், விரைவில் தன்னை புதிய தோற்றத்தில் ரசிகர்கள் பார்க்கப்போகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், உடல் எடையை குறைத்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் புதிய புகைப்படங்களை சக்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
