விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தொடர்பான தகவல்கள் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்களின் ஆர்வமும் அதிகரித்து வருகிறது.
மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி ‘ரோஜா’ திரைப்படத்தில் தொடங்கி பல வெற்றிப் படைப்புகளை வழங்கியுள்ளது. அதேபோல், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் இணைந்திருப்பதும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட பணிகள் கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில், அங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஹவுரா பாலத்திலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் படப்பிடிப்பை இயக்கும் காட்சிகளும், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
கொல்கத்தா மற்றும் புதுச்சேரியைத் தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி மீசை மற்றும் தாடி இல்லாத வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அவரது புதிய லுக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
