தந்தையின் அன்பையும், குடும்பத்திற்காக அவர் செய்யும் தியாகங்களையும் மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘பாதர்’. ஆர்.சி. ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தை இராஜா மோகன் இயக்குகிறார். பிரகாஷ் ராஜ் மற்றும் ‘டார்லிங்’ கிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இராஜா மோகன், வழக்கமாக அதிகம் பேசப்படாத தந்தையின் உணர்வுகளை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி வருகிறார். தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் படத்தை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு குடும்பத்தில் தாயின் பாசமும் தியாகமும் அதிகமாக கொண்டாடப்படும் நிலையில், தந்தையின் அன்பு, வலி மற்றும் பெருமை பல நேரங்களில் வெளிப்படையாக பதிவு செய்யப்படுவதில்லை. அந்தப் பார்வையை மாற்றும் வகையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை கதையின் முக்கிய அம்சமாகக் கொண்டு ‘பாதர்’ உருவாகியுள்ளது. மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட அழகிய பகுதிகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. கமர்ஷியல் அம்சங்களுடன் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நகுல் அப்யங்கர் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான தீம் மியூசிக் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்ற நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் இசை உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கிடையே தற்போது ‘பாதர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் அழுத்தமான வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
