ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘இருமுடி’ திரைப்படம் ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது. ரவி தேஜாவின் திரைப்பயணத்தில், அவர் நடித்த ஒரு திரைப்படம் இவ்வளவு வேகமாக ரூ.100 கோடியை கடந்திருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
தெலுங்கு மாநிலங்களில் எந்தவிதமான சிறப்பு டிக்கெட் கட்டண உயர்வும் இல்லாமல் இப்படம் இந்த வசூலைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. வழக்கமான டிக்கெட் கட்டணத்திலேயே ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளதால், ‘இருமுடி’ படத்தின் வசூல் சாதனை திரையுலகினர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆன்மிகத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் ரவி தேஜா ஐயப்ப பக்தராக நடித்திருப்பது படத்திற்குக் கிடைத்த வரவேற்பில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருவதால், விரைவில் ரூ.150 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
