‘ஜெயிலர் 2’ படத்தில் பழக்கடை மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நமோ நாராயணா, நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார். நகைச்சுவைக் காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், படத்தின் முதல்பாதியில் இடம்பெற்ற அவரது காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
‘நாடோடிகள்’, ‘ஈசன்’, ‘போராளி’, ‘குட்டி புலி’, ‘கொம்பன்’, ‘ரஜினி முருகன்’, ‘நாடோடிகள் 2’, ‘ராயன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நமோ நாராயணா, ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற பெரிய விருப்பம் தனக்கு இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்த தன்னை, இயக்குநர் சமுத்திரக்கனி ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘ஜெயிலர் 2’ படத்தின் டிரெய்லரில் ரஜினிகாந்துடன் தன்னைப் பார்த்த பலரும் மகிழ்ச்சியுடன் பாராட்டுவதாக நமோ நாராயணா தெரிவித்துள்ளார். ரஜினியுடன் நடிப்பது தனது வாழ்க்கையில் நிகழும் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும், அவருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படப்பிடிப்புத் தளத்தில் ஒரு நடிகர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், மற்றவர்களிடம் எப்படிப் பழக வேண்டும், அன்பை எப்படிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் ரஜினிகாந்திடம் இருந்து கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். எத்தனை பெரிய வெற்றிகளைப் பெற்றாலும் எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பதால்தான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராகத் திகழ்கிறார் என்றும் நமோ நாராயணா பாராட்டியுள்ளார்.
