கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து நிகில் பிரேம்ராஜ் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’. ஆண்டனி வர்கீஸ், பாலு வர்கீஸ், சாய்ஜு குருப், முன்னாள் கால்பந்து வீரர் ஐ.எம். விஜயன் உள்ளிட்டோர் நடித்த இப்படம், ஒரு கிராமத்து மக்களுக்கும் கால்பந்துக்கும் இடையேயான உறவை மையமாகக் கொண்டிருந்தது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இப்படம் தமிழில் ‘7 ஸ்டார் பாய்ஸ்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வெளியிடப்படும் இப்படத்தை பீனிக்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் டி. அசோக் வெளியிடுகிறார். அசல் படத்தின் விளையாட்டு பின்னணியும், கிராமத்து மக்களின் ஆர்வமும் தமிழ் ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்கு வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ‘7 ஸ்டார் பாய்ஸ்’ படத்தின் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கால்பந்து போட்டிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள காட்சிகளுடன் வெளியான இந்த டிரெய்லர், ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
