‘த்ரிஷ்யம் 4’ வருமா? தயாரிப்பாளர் சொன்ன முக்கிய தகவல்!

மோகன்லால் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் கூட்டணியில் உருவான ‘த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதில் ஜார்ஜ் குட்டி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். தனது மகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் காரணமாக ஒரு கொலையைச் செய்யும் ஜார்ஜ் குட்டி, அந்தக் கொலையை காவல்துறையிடம் இருந்து எப்படி மறைக்கிறார் என்பதே முதல் பாகத்தின் மையக்கருவாக அமைந்தது.

முதல் பாகத்தைத் தொடர்ந்து நடைபெறும் காவல்துறை விசாரணைகளையும், ஜார்ஜ் குட்டி தனது புத்திசாலித்தனத்தால் அவற்றை எப்படி சமாளிக்கிறார் என்பதையும் அடுத்தடுத்த பாகங்கள் எடுத்துக்காட்டின. சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘த்ரிஷ்யம் 3’ ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது. இருப்பினும், முந்தைய இரண்டு பாகங்களுடன் ஒப்பிடும்போது மூன்றாம் பாகம் சற்று குறைவாக இருந்ததாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த சூழலில், ‘த்ரிஷ்யம்’ தொடரின் நான்காம் பாகம் நிச்சயம் உருவாகும் என தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற மழவில் மனோரமா விருது விழாவில் பேசிய அவர், “த்ரிஷ்யம் படத்தின் நான்காவது பாகம் கண்டிப்பாக வரும். இதை நான் மனதாரச் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நான்காம் பாகம் தொடர்பாக மோகன்லால் அல்லது ஜீத்து ஜோசஃப் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஒவ்வொரு பாகமும் முடிந்ததும் அடுத்த பாகத்திற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என ஆண்டனி பெரும்பாவூர் கூறுவார் என்று ஜீத்து ஜோசஃப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், வலுவான திரைக்கதை அமைந்தால் மட்டுமே அடுத்த பாகம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் இந்தி ரீமேக் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ‘த்ரிஷ்யம் 4’ குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading