திருமணத்திற்காக பெண் தேடி வரும் ரியோவின் வாழ்க்கையில், ஒரு ரயில் பயணத்தின்போது வர்திகா எதிர்பாராத விதமாக அறிமுகமாகிறார். அந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. ஆனால், வர்திகா தனது காதலுக்கு வைக்கும் ஒரு வித்தியாசமான நிபந்தனை ரியோவுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மாலை 6 மணிக்கு பிறகு தான் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்றும், அதனால் அந்த நேரத்திற்கு மேல் தன்னை சந்திக்கக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறுகிறார்.
வர்திகாவின் இந்த வித்தியாசமான கட்டுப்பாட்டுக்கான காரணத்தை தெரிந்துகொள்ளும் முயற்சியில் ரியோ இறங்குகிறார். சாதாரணமான ஒரு நிபந்தனைக்குப் பின்னால் யாரும் எதிர்பார்க்காத பிரச்சினை ஒன்று இருப்பதை அவர் கண்டுபிடிக்கிறார். அந்த உண்மை தெரிந்த பிறகும் ரியோ தனது காதலை தொடர்ந்தாரா, இருவரின் உறவு திருமணம் வரை சென்றதா என்பதுதான் கதையின் அடுத்தடுத்த நகர்வுகளாக அமைந்துள்ளன.
திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞனாக ரியோ நகைச்சுவையுடன் கதாபாத்திரத்தை சுமந்துள்ளார். காதலுக்கான ஏக்கம், எதிர்பாராமல் வரும் சிக்கல், அதை சமாளிப்பதற்கான போராட்டம் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது. முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது அவரது நடிப்பில் நல்ல முன்னேற்றமும் தெரிகிறது. வர்திகா கதாநாயகியாக அழகாக பொருந்துவதுடன், சில முக்கியமான காட்சிகளில் தனது நடிப்பாலும் கவனம் பெறுகிறார்.
ரியோவின் குடும்பத்தினராக சேத்தன், மாளவிகா அவினாஷ், தாபியா அபு ஆகியோரும், மாமனாக முனீஷ்காந்தும், நண்பராக பாலாஜி தியாகராஜன் தயாளனும் நடித்துள்ளனர். மேலும் தீபா வெங்கட், மா.கா.பா. ஆனந்த், காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்டோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை பொருத்தமாக கையாண்டுள்ளனர். மல்லிகார்ஜுனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வண்ணமயமான தோற்றத்தை வழங்குகிறது. அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
காமெடி மற்றும் காதல் கலந்த காட்சிகள் படத்தின் பொழுதுபோக்கு அம்சத்தை அதிகரிக்கின்றன. சில இடங்களில் லாஜிக் தொடர்பான விஷயங்களை இன்னும் கவனித்திருக்கலாம். இருப்பினும், காதல், கலாட்டா என ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையில் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன். குறிப்பாக கிளைமேக்ஸில் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டிருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
