நிமிஷா சஜயன் மற்றும் கருணாஸ் இணைந்து நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் துருக்கியில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வாகியுள்ளது. கலமாயா சினிவெர்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சஜீவ் பழூர் இயக்கியுள்ளார். சிறுவர், சிறுமிகளும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைக்கதை எழுத்தாளராக அறியப்பட்ட சஜீவ் பழூர், ‘என்ன விலை’ படத்தின் மூலம் இயக்குநராக தனது புதிய பயணத்தை தொடங்குகிறார். இவர் பணியாற்றிய ‘தொண்டி முதலும் திருக்ஷாக்ஷியும்’ திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது. மேலும், ‘என்ன விலை’ ஏற்கெனவே பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று, நான்கு விழாக்களில் விருதுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் நடைபெறும் கையா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் பான் இந்திய மொழிகளில் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நிமிஷா சஜயன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டிஎன்ஏ’ திரைப்படம் தமிழில் கவனம் பெற்ற நிலையில், அதன் பின்னர் வெளியான ‘டப்பா கார்டெல்’ இணையத் தொடரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
