புதிய படத்திற்காக ஜோடி சேர்ந்த ஜெயராம் – சிம்ரன்…‌ பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

சென்னையில் இன்று நடைபெற்ற புதிய படத்தின் படப்பூஜையுடன் இயக்குநர் கவுதம் ராஜின் அடுத்த படத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. ‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ ஆகிய படங்களை இயக்கிய கவுதம் ராஜ் இயக்கும் இப்படத்தில் ஜெயராம் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கின்றனர். இருவரும் ஏற்கெனவே ‘பஞ்சதந்திரம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தாலும், அந்தப் படத்தில் சிம்ரன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது உருவாகும் இப்படத்தில் தான் ஜெயராமுக்கு ஜோடியாக சிம்ரன் முதன்முறையாக நடிக்கிறார்.

புதிய படத்தில் சிம்ரனுடன் இணைந்து நடிப்பது குறித்து பேசிய ஜெயராம், இதனை தனக்கு மகிழ்ச்சியான தருணமாகக் குறிப்பிட்டார். ‘பஞ்சதந்திரம்’ படத்தில் சிம்ரனுடன் இணைந்து நடித்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவருடன் கதாநாயகன் – கதாநாயகியாக இணைந்திருப்பது சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து, அனைவருக்கும் தனது ஓணம் பண்டிகை வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே படத்தின் கதைக்களம் குறித்து சிம்ரன் கூறுகையில், ஜெயராம் சிறந்த கலைஞர் என்றும், அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். மேலும், 90-ஸ் தலைமுறையினருக்கும் ஜென்-சி ரசிகர்களுக்கும் நெருக்கமாக இருக்கும் வகையில் கதை அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார். ஏற்கெனவே கவுதம் ராஜ் இயக்கிய ‘ராட்சசி’ கல்வியை மையமாகக் கொண்ட சமூகப் பார்வையுடன் உருவானது. ‘கழுவேத்தி மூர்க்கன்’ கிராமப்புற பின்னணியில் அழுத்தமான கதையை பேசியிருந்தது. ஆனால், இந்த முறை காதலும் நகைச்சுவையும் கலந்த வேறுபட்ட களத்தில் படத்தை உருவாக்க உள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இப்படத்தை ஆர்யாவின் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading