சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’. ஃபேன்டஸி கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் ஷாருக்கான் ‘ராக்கா’வில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ‘கிங்’ படத்தின் இறுதிக்கட்ட பாடல் காட்சியில் நடித்து வரும் அவர், செப்டம்பர் மாதத்தில் ‘ராக்கா’ படப்பிடிப்பில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படக்குழு மற்றொரு பிரபல சர்வதேச நட்சத்திரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவரது கதாபாத்திரம் தொடர்பான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘ராக்கா’ படத்தின் முதல் தோற்றத்தில் அல்லு அர்ஜுன் மனித மிருகம் போன்ற வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். போஸ்டரை வெளியிட்ட அட்லி, பல ஆண்டுகளாகத் தனது மனதில் வளர்த்து வந்த கனவுதான் இப்படம் என்றும், சுமார் 18 ஆண்டுகளாக இந்தக் கதையைப் பற்றி யோசித்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
—
