‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்த குடும்பக் கதையை ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட விதம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் தயாரிப்பாளர் வம்சி, தமிழ்நாட்டைச் சேர்ந்த தான், கேரளாவைச் சேர்ந்த மமிதா பைஜு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரவீனா டாண்டன் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இப்படத்தில் ஒன்றாக பணியாற்றியதாக சூர்யா குறிப்பிட்டார். மொழி மற்றும் மாநில எல்லைகளைத் தாண்டி ரசிகர்கள் படத்தை வரவேற்றிருப்பதாகக் கூறிய அவர், “இது ஒரு நல்ல திரைப்படம், மனதிற்கு நெருக்கமான உணர்வு” எனக் கூறி குடும்பக் கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
திரைப்படத்தின் வெற்றியை டிக்கெட் எண்ணிக்கை அல்லது வசூல் தொகையை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது என்று சூர்யா தெரிவித்தார். படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் ரசிகர்கள் பேசும் வார்த்தைகளிலும், அவர்களின் மனதில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் உணர்வுகளிலும், அவர்கள் சிந்தும் கண்ணீரிலும் சிரிப்பிலும் தான் உண்மையான வெற்றி இருப்பதாக அவர் கூறினார். பணம் முக்கியமானதாக இருந்தாலும், இரண்டு ஆண்டுகள் கழித்தும் ஒரு திரைப்படத்தைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டிருப்பதே அதன் மிகப்பெரிய வெற்றி என சூர்யா குறிப்பிட்டார். அந்தப் படைப்பு ரசிகர்களிடம் ஏற்படுத்தும் உணர்வே தனக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
—
