Advertisement

பாரதிராஜா, பாக்யராஜ் தமிழ் சினிமாவின் அடையாளங்கள்.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி

சென்னை கலைவாணர் அரங்கில் மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரின் நினைவாக “ராஜகோபுரங்கள்” என்ற தலைப்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துக்கொண்டு பேசினார்.

அதில்,இருவருடனும் இணைந்து பணியாற்றியதை தனது திரையுலகப் பயணத்தின் பெருமையாக கருதுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார். மரணம் அனைவருக்கும் பொதுவானது என்றாலும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த சாதனைகளும் தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்புகளும் மிகப்பெரியது என்று குறிப்பிட்டார்.

பாரதிராஜா தனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய ஊக்கமாக இருந்தவர் என்றும், தோல்விகளைக் கண்டு அஞ்சாத கலைஞர் என்றும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார். இயக்குநர் கே. பாலசந்தர், “பாரதிராஜா போல ஒரு கலைஞன் இல்லை” என்று கூறியதை நினைவுகூர்ந்த அவர், அத்தகைய ஜாம்பவான்களுடன் பயணித்தது தனக்கு பெருமை அளிப்பதாகக் கூறினார்.வாழ்க்கையில் வெற்றி, தோல்வி மட்டுமின்றி பாராட்டுகளும் விமர்சனங்களும் தொடரும் நிலையில், அவற்றை கடந்து இருவரும் தங்களது வளர்ச்சிப் பாதையில் பயணித்ததாக கமல்ஹாசன் குறிப்பிட்டார். பாரதிராஜாவை வெறும் இயக்குநர் என்று வரையறுக்க முடியாது என்றும், அவர் தனது குடும்பத்தில் ஒருவராகவே இருந்தார் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் அடையாளங்களாக பாரதிராஜாவும் பாக்யராஜும் திகழ்ந்ததாகக் கூறிய கமல்ஹாசன், அவர்கள் வெற்றி பெறுவதற்கு முன்பே இருவரும் மிகப்பெரிய சாதனைகளை படைப்பார்கள் என்பதை தான் அறிந்திருந்ததாக தெரிவித்தார். மேலும், அரசுகளின் ஆதரவுடன் இந்திய சினிமாவை இன்னும் அதிகமாக ஊக்குவிக்க வேண்டும் என்றும், ஒரு திரைப்படத் தொழிலாளி இந்தியாவின் மிகப்பெரிய விருதைப் பெறும் நாளை நேரில் காண விரும்புவதாகவும் கூறினார்.

—

Add a Comment

Leave a Reply