லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ள “டிசி” திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதேபோல், படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, வெளியாகும் முன்பே வைரலான “ராகா ஆஃப் ரிவெஞ்ச்” டிராக் குறித்து இசையமைப்பாளர் அனிருத் புதிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “இந்த இசை ஆரம்பத்தில் தனியாக வெளியிட திட்டமிடப்படவில்லை. கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘டிசி’ டிரெய்லரை திரையிட வேண்டியிருந்ததால், மிகவும் குறுகிய நேரத்தில் அதற்கான பின்னணி இசையை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்று கூறினார்.டிரெய்லரை சமர்ப்பிக்க வெறும் 48 மணி நேரம் மட்டுமே கிடைத்ததாகவும், அந்த அவசரநிலையில்தான் இந்த இசை உருவானதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார். பின்னர், “இந்த டிரெய்லர் இசையை இணையத்திலும் வெளியிட்டால் எப்படி இருக்கும்?” என்ற யோசனை வந்ததால் உடனடியாக வெளியிட்டதாக அவர் விளக்கினார்.
இசையின் வடிவமைப்பைப் பற்றி பேசும்போது, உலகளவில் இந்திய இசையின் தனித்துவத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக அவர் கூறினார். அதற்காக தென்னிந்திய தாளங்களையும், வடஇந்திய இந்துஸ்தானி குரலிசையையும் இணைத்து இந்த டிராக்கை உருவாக்கியதாக தெரிவித்தார். டிரெய்லருக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததால், பின்னர் அந்த இசையை முழுமையான தனிப்பாடலாக வெளியிட்டதாக அனிருத் கூறியுள்ளார்.
