சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கும் “சேயோன்” திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் மீண்டும் தொடங்கியுள்ளது.தாய் கிழவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவக்குமார் இயக்கும் படம் என்பதால், ஆரம்பத்திலிருந்தே இதன் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் மதுரையில் நிறைவடைந்திருந்தது.
புதிய ஷெட்யூலுக்காக சிவகார்த்திகேயன் நேற்று சென்னை விமான நிலையம் வழியாக மதுரைக்கு சென்றார். கதை அடுத்த கட்டத்திற்கு நகரும் முக்கியமான காட்சிகள் இந்த அட்டவணையில் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு தொடங்கியதை அறிவிக்கும் வீடியோவில், கமல்ஹாசன் நடித்த “விருமாண்டி” படத்தின் “ஆடி வெள்ளி பூத்திருச்சு…” பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனால், இந்தப் படத்துக்கும் விருமாண்டி உலகத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.பாக்யஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
