Advertisement

பிரபுதேவா – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான ‘மூன்வாக்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மின்சார கனவு திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 28 ஆண்டுகள் கழித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நடிகர் பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் மூன்வாக். என்.எஸ். மனோஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘மூன்வாக்’ என்ற பெயர், பாப் இசை உலகின் மன்னராகப் போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற நடன அசைவைக் குறிக்கிறது. அதற்கேற்ப இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு பிரபுதேவா அதிரடியான நடனத்தை வெளிப்படுத்தியிருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இசை, நடனம், நகைச்சுவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல மொழி ரசிகர்களையும் கவரும் பான் இந்தியா திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவாவுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக மூன்வாக் உருவாகியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, படத்தின் வெளியீட்டுத் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, மூன்வாக் திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Add a Comment

Leave a Reply