தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். 2011ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி வெளியான இப்படத்தின் மூலம் திரையுலகில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய அனிருத், இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி தனது இசைப் பயணத்தின் முக்கியமான தருணங்களை நினைவுகூர்ந்து, ரசிகர்களுக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அனிருத் கூறியிருப்பதாவது: “சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் எங்களது முதல் பாடல் உலகிற்கு அறிமுகமானது. அன்று தொடங்கிய பயணம் இன்றுவரை எந்தத் தடையுமின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இசை, நினைவுகள், கொண்டாட்டங்கள் எனப் பல அற்புதமான அனுபவங்களுடன் இந்த 15 ஆண்டுகள் கடந்து சென்றுள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் எங்களது இசை பயணித்துள்ளது. ஒரு மொழியில் தொடங்கிய பாடல்கள் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைச் சென்றடைந்துள்ளன.
சுயாதீன இசைப் படைப்புகளை உருவாக்கியது, எங்களுக்குப் பிடித்த சர்வதேசக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது, வெவ்வேறு மொழிகளில் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது எனப் பல மகிழ்ச்சியான தருணங்கள் இந்தப் பயணத்தில் அமைந்தன. அதேபோல், நாட்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலும் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றோம். முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகின் பல முக்கிய ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.
இணைய இசைத் தளங்களில் சாதனைகள் படைத்தது, கோடிக்கணக்கான ரசிகர்களை எங்களது பாடல்கள் சென்றடைந்தது, உலகின் பல்வேறு இடங்களில் அரங்கம் நிறைந்த இசை நிகழ்ச்சிகளை நடத்தியது என ஒவ்வொரு அனுபவமும் எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது. இசைத் தரவரிசைகளில் முதலிடம் பிடித்த பாடல்களையும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எங்களுடன் சேர்ந்து பாடிய தருணங்களையும் மறக்க முடியாது. இசை நிகழ்ச்சிகளின்போது ரசிகர்களிடம் காணப்படும் உற்சாகமும், மொழிகளைக் கடந்து இசை அனைவரையும் இணைக்கும் விதமும் நாங்கள் கனவில் மட்டுமே நினைத்துப் பார்த்த அனுபவங்கள்.
ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு புதிய கூட்டணியும், சாதனையும், மேடையும் எங்களுக்குக் கிடைத்த பரிசாகவே பார்க்கிறோம். இந்த மகிழ்ச்சியான பயணத்தில் 2026ஆம் ஆண்டும் முக்கியமானதாக அமைந்துள்ளது. எல்.ஐ.கே, ஜனநாயகன், டிசி, பாரடைஸ், ஜெயிலர் 2 எனப் பல முக்கியமான படங்கள் இந்த ஆண்டில் அமைந்துள்ளன. எங்களது 15 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாட இதைவிடச் சிறந்த தருணம் இருக்க முடியாது.
இந்தப் பயணத்தின் அடுத்த முயற்சியாக ‘அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ்’ (Albuquerque Records) என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். எங்களுக்கு இவ்வளவு வாய்ப்புகளையும் அன்பையும் கொடுத்த இசைத்துறைக்கு எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கவும், அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கும் திறமையாளர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த முயற்சி உதவும் என நம்புகிறோம்.
இந்த 15 ஆண்டுகளில் பல வெற்றிகளையும் சவால்களையும் சந்தித்திருக்கிறோம். ஆனால், ஒரு நாள்கூட ஓய்வெடுக்காமல் தொடர்ந்து உழைத்து வருகிறோம். இனியும் ஓய்வெடுக்கும் எண்ணமில்லை. ஆரம்பத்தில் எங்களை இசையின் பக்கம் ஈர்த்த அதே ஆர்வம்தான் இன்றும் தொடர்ந்து செயல்படுவதற்கான உந்துதலாக இருக்கிறது.
இந்த நேரத்தில் எங்களிடம் இருப்பது நன்றியுணர்வு மட்டுமே. எங்களது பாடல்களைக் கேட்டவர்கள், மீண்டும் மீண்டும் ரசித்தவர்கள், எங்களுடன் சேர்ந்து பாடியவர்கள், கொண்டாடியவர்கள், ஆதரவளித்தவர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் பயணம் எங்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல; உங்களுக்கும் அதில் சமமான பங்கு இருக்கிறது. 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏராளமான நினைவுகள் கிடைத்துள்ளன. இன்னும் அடைய வேண்டிய கனவுகள் பல இருக்கின்றன. இப்போது மீண்டும் ஸ்டுடியோவுக்குத் திரும்புகிறோம். எங்களது சிறந்த படைப்புகள் இனிமேல்தான் வரவிருக்கின்றன. இது இன்னும் ஒரு தொடக்கம்தான். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
