காதல் தோல்வி, மன அழுத்தம் குறித்து மனம் திறந்து பேசிய அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தித்த மன உளைச்சல் மற்றும் தோல்வியடைந்த காதல் அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த உறவு தன் வாழ்க்கையையும் தொழிலையும் கடுமையாக பாதித்ததாக அவர் கூறியுள்ளார். தனது பழைய சமூக வலைதள பதிவுகள் பலவும் அந்த காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள்தான் என அனுபமா தெரிவித்தார். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தன்னுடன் பணியாற்றியவர்களும் தனது மாற்றத்தை கவனித்ததாகவும், அந்த உறவிலிருந்து விலக வேண்டும் என்று அனைவரும் கூறியதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

முன்னாள் காதலரின் நடத்தை பற்றி பேசும்போது, அதை “அந்நியன்” படக் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டார். ஒரு நாள் மிகவும் அன்பாக நடந்து, மறுநாள் முற்றிலும் மாறுபட்ட கொடூரமான அணுகுமுறையைக் காட்டுவார் என்றும், பின்னர் மன்னிப்பு கேட்பார் என்றும் அவர் கூறினார். இந்த மாற்றமான நடத்தையே தன்னிடம் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.அந்த உறவின் காரணமாக தனது திரைப்பட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். தனது முடிவுகள், நட்பு வட்டம் மற்றும் தொழில்வாய்ப்புகள் வரை கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பல நல்ல பட வாய்ப்புகளை இழந்ததாகவும் அனுபமா தெரிவித்துள்ளார்.

மேலும், “டிராகன்” திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள முடியாததற்கு அந்த உறவின் கட்டுப்பாடுகளே காரணம் என்று அவர் கூறினார். திருமண பேச்சு மிகவும் விரைவாக முன்னேறிய நிலையில், சூழ்நிலையை புரிந்துகொண்டு அதை மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். “சரியான நேரத்தில் எடுத்த முடிவுதான் என்னை ஒரு மோசமான திருமண வாழ்க்கையிலிருந்து காப்பாற்றியது” என்று அனுபமா உறுதியாக கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading