சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற “மக்கள் மேடை” அமைப்பின் பாரத சேவா இணையதள தொடக்க விழா கவனம் பெற்றது. ஸ்ரீ தயா அறக்கட்டளையின் தலைவர் லதா ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட உள்ள சமூக நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களும் பயன்பெறும் வகையில் “மக்கள் மேடை” இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், “இந்த மக்கள் சேவை 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஒவ்வொரு செங்கல்லாக இந்த அமைப்பை கட்டியுள்ளோம்” என்றார்.
மேலும், “இந்தியாவுக்கு ஒரு புதிய கல்வி முறையை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து சமூக நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்” என்றும் தெரிவித்தார். தாங்கள் மேற்கொண்டு வரும் சேவைகளை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லவே இந்த இணையதளம் தொடங்கப்பட்டதாகவும் கூறினார்.
காவிரி இணைப்புத் திட்டம் குறித்து கேட்கப்பட்டபோது, “இது ஒரு அரசியல் கேள்வி. காவிரி இணைப்புத் திட்டம் எந்த நேரத்தில் நடைமுறைக்கு வருகிறதோ, அப்போது ரஜினிகாந்த் கண்டிப்பாக ஒரு கோடி நிதியுதவி அளிப்பார் என்று பதிலளித்தார். மேலும், “ரஜினிகாந்த் 100 சதவீதம் எனக்கு ஆதரவு அளிக்கிறார். அவருடைய ஆதரவை விட அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு முக்கியம்” என்றும் கூறினார். “மக்கள் மேடை” அரசு கவனத்திற்கு பிரச்சினைகளை கொண்டு செல்லுமா என்ற கேள்விக்கு, “மக்கள் பிரச்சனைதான் அரசாங்க பிரச்சனை. தேவையான நிலைமை வந்தால் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.
