சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 10-ம் தேதி மதுரையில் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் மதுரையில் தொடங்கியது. அந்த நிகழ்வில் கமல்ஹாசன் நேரில் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்திருந்தார்.
தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஒரு மாதத்திற்கும் மேலாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற உள்ளது. சிவகார்த்திகேயனுடன் பாக்யஸ்ரீ போஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்துக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
