கார்த்தியின் 30-வது திரைப்படமாக உருவாகி வரும் ‘கார்த்தி 30’ படத்திற்கான முக்கிய அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் இசையை முன்னணி இசையமைப்பாளரும் பாப் நட்சத்திரமுமான தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சமூக வலைதளங்களில் சிறப்பு பதிவு ஒன்றை பகிர்ந்தது. “ராக்ஸ்டார் எங்கள் அணியில் இணைகிறார். எங்கள் இசையமைப்பாளருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த கூட்டணியுடன் புதிய சாதனை படைக்க ஆவலாக இருக்கிறோம்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பல வெற்றிப்படங்களை இயக்கிய இளம் இயக்குநர் கல்யாண் சங்கர் இந்தப் படத்தை இயக்குகிறார். கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். முன்னதாக ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், இந்தப் படத்தையும் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் – கார்த்தி கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் மூலம், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
