சந்தீப் கிஷன் நடித்துள்ள “சிக்மா” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் ஜேசன் சஞ்சய், தனது சினிமா பயணம் எப்படி தொடங்கியது என்பதை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதாவது சிறுவயதிலிருந்தே கதைகள் சொல்லும் ஆர்வம் இருந்ததாகவும், பின்னர் தோன்றிய எண்ணங்களை எழுதத் தொடங்கியதுதான் தன்னை திரைப்பட உலகத்திற்குக் கொண்டுசென்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக கனடாவில் திரைப்படம் தொடர்பான படிப்பை தேர்வு செய்து, அங்கு நண்பர்களுடன் சேர்ந்து சில விளம்பரப்படங்களையும் இயக்கியதாக தெரிவித்துள்ளார்.
உலக சினிமாக்களை பார்த்த அனுபவம் தனது பார்வையை மாற்றியதாகவும், குறிப்பாக நிவின் பாலியின் ‘மூத்தோன்’ படத்தை பார்த்தபோது அவரை சந்தித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் கூறினார். இந்தியா திரும்பிய பிறகு தனது சொந்த குழுவை அமைத்து, தொடர்ந்து விவாதித்து “சிக்மா” கதையை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், “நான் பெரிய யுவன் ரசிகன். இந்தப் படத்தில் அவர் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இயக்குநராக முதன்முறையாக அவரை சந்தித்தது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்” என்றார்.
அதேபோல் ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் உங்களை அழைத்தால் இங்கிருந்து எந்த நடிகரை அழைத்து செல்வீர்கள் என்ற தொகுப்பாளரின் கேள்விக்கு, “நான் கூட்டிச் செல்வது அப்பாவை தான் .அவரும் ஜேசன் ஸ்டேதமும் சேர்ந்து வந்தால் செம்ம காம்பினேஷன் இருக்கும், இந்த காணொளியை ஜேசன் ஸ்டேதம் காண வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.
