நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் மற்றும் நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
போராட்டத்தில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தமிழகத்தில் போராடும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதை கண்டித்தார். நீட் தேர்வுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டுள்ள தமிழக அரசு, மாணவர்கள் அமைதியான முறையில் போராடுவதற்கான உரிய இடத்தை ஒதுக்கி வழங்க வேண்டும் என்றும், அவர்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நீட் தேர்வை ஒழிக்கும் இலக்கை அடைய மாணவர்களுடன் சேர்ந்து போராட தயாராக இருப்பதாக தெரிவித்த பா.ரஞ்சித், மெரினா உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களை மூடுவதற்குப் பதிலாக மக்களுடன் இணைந்து நிற்கும் ஆட்சியை எதிர்பார்ப்பதாக கூறினார். மாணவர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
—
