2020-ம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் வெற்றியை பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் தயாராகி வருகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா மீண்டும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜிக்கு பதிலாக, இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார்.
நடிகர்கள் தேர்விலும் இந்தப் படத்திற்கு பெரிய அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சினேகா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி ஆகியோருடன் யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். மேலும், ரூ.100 கோடிக்கும் அதிகமான பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வெளியீட்டுக்காக நயன்தாராவும் ஆர்வத்துடன் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது திரைப்பயணத்தில் இப்படம் குறிப்பிடத்தக்க அனுபவமாக அமையும் என அவர் கருதுவதாக கூறப்படுகிறது. நகைச்சுவையுடன் பேண்டசி மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளை இணைத்து உருவாகும் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கையில் சுந்தர்.சி இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு இறுதிக்குள் திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே ஆண்டில் நயன்தாரா நடிப்பில் ‘ஹாய்’, ‘டாக்ஸிக்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படமும் வெளியாகும் என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
—
