தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி தயாரித்த ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், பிரீத்தி முகுந்தன் மற்றும் கயாது லோஹர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அம்சங்களுடன் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், டிக்கெட் விற்பனையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை படம் சுமார் ரூ.15 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், படத்தின் வெற்றி விழாவில் பேசிய அதர்வா, “என் அப்பா முரளிக்கு ஏதாவது ஒரு வகையில் மரியாதை செலுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். அந்த நேரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் வந்தார். ஒரு நல்ல நண்பராக அவர் இதை சாத்தியமாக்கினார். என் அப்பாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் படம் அழகாக அமைந்துள்ளது. இதில் சின்னி ஜெயந்த் பேசிய வசனங்களும், ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ பாடலும் என் கண்களை குளமாக்கிவிட்டன,” என்று உருக்கமாக தெரிவித்தார். நடிகர் முரளிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்த ‘இதயம்’ திரைப்படத்தைப் போலவே, ‘இதயம் முரளி’ திரைப்படமும் அதர்வாவின் திரைப்பயணத்தில் முக்கிய வெற்றிப் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
—
