‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் ‘வாரணாசி’ திரைப்படத்திலிருந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தில் பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் ராஜமவுலி, “அவள் புன்னகைக்கும் போது பேரழகு… புன்னகைக்காத போது பேரனல்… வாரணாசியில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா” என்று குறிப்பிட்டுள்ளார். வெளியான போஸ்டரில், சுருள் தலைமுடி மற்றும் கருப்பு நிற உடையில் ஆக்ரோஷமான தோற்றத்தில் பிரியங்கா சோப்ரா காட்சியளிப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுமார் ரூ.1,400 கோடி செலவில் உருவாகும் இப்படம், இந்திய திரையுலக வரலாற்றிலேயே மிக அதிக பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படமாகக் கூறப்படுகிறது. கி.பி. 512 முதல் தற்காலம் வரை, திரேதா யுகம் முதல் கலியுகம் வரை பல காலகட்டங்களை இணைக்கும் அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மிக சாகசத் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. அண்டவெளியில் இருந்து பூமிக்கு வரும் விண்கல் ஆபத்தும், வாரணாசி படித்துறைகளின் மர்மங்களும் கதையின் மையமாக அமைந்துள்ளன. ஐதராபாத், ஒடிசா, கென்யா மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இப்படத்தில் மகேஷ் பாபு ‘ருத்ரா’ மற்றும் ‘ஸ்ரீராமர்’ என இரு பரிமாணங்களில் நடித்துள்ளார். பிரித்விராஜ் சுகுமாரன் ‘கும்பா’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜயேந்திர பிரசாத் கதையில், எம்.எம். கீரவாணி இசையமைக்கும் ‘வாரணாசி’ திரைப்படம், 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
