தேசிய விருதுக்கு பிறகும் இன்னும் சாதிக்க வேண்டும்… மனம் திறந்த விக்ராந்த் மாஸே!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ராந்த் மாஸே, ’12th Fail’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர். மேலும், ‘பிரீதம் அண்ட் பெட்ரோ’ தொடரில் அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது. தற்போது அவர் நடித்துள்ள ‘முசாபிர் கபே’ தொடர் ஜூலை 24-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தத் தொடரை ருச்சிர் அருண் இயக்கியுள்ளார்.

‘முசாபிர் கபே’ தொடரில் நடிக்க காரணம் குறித்து பேசிய விக்ராந்த் மாஸே, “இந்தக் கதையின் உணர்வுப்பூர்வமான நேர்மைதான் என்னை மிகவும் ஈர்த்தது. நான் ஏற்றுள்ள ‘சந்தர்’ கதாபாத்திரம் பலரின் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடியது. நிஜ வாழ்க்கை மனிதர்களைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதையே நான் விரும்புகிறேன். அந்த வகையில் இந்தக் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது,” என்றார்.

வேதிகாவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், “வேதிகாவும், மஹிமாவும் தங்கள் கதாபாத்திரங்களை முன்கூட்டியே புரிந்துகொண்டு தீவிரமாக தயாரானார்கள். படப்பிடிப்புக்கு முன்பே நாங்கள் ஒன்றாக பயிற்சி எடுத்தோம். அந்த புரிதல் திரையிலும் இயல்பாக வெளிப்பட்டது. அவர்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது,” என்று தெரிவித்தார்.

இந்தத் தொடரில் இணைத் தயாரிப்பாளராக செயல்பட்டது குறித்து பேசிய அவர், “நீண்ட காலமாக திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்தக் கதையை கேட்டவுடன், நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இணைய வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் நம்பிய கதை என்பதால் எந்த கூடுதல் அழுத்தமும் உணரவில்லை. சரண்யா ராஜகோபால் போன்ற திறமையான எழுத்தாளர் இருந்ததால், வலுவான திரைக்கதை முழு தயாரிப்பு பணியையும் எளிதாக்கியது,” என்றார்.

தேசிய விருது பெற்ற பிறகு தன்னை வெற்றிகரமான நடிகராக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆம், என்னை வெற்றிகரமான நடிகராகவே கருதுகிறேன். இந்த நிலையை அடைய இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கடினமாக உழைத்திருக்கிறேன். அந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் இதையே இறுதி இலக்காக நினைக்கவில்லை. இன்னும் பல அர்த்தமுள்ள படங்களில் நடிக்கவும், சவாலான கதாபாத்திரங்களை ஏற்று தொடர்ந்து என்னை நிரூபிக்கவும் விரும்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading