கேமரா தொழில்நுட்பம் முதல் படப்பிடிப்பு வரை ஒவ்வொரு அம்சத்திலும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு, இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ‘தி ஒடிஸி’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் மிகவும் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாக இந்த படம் பார்க்கப்படுகிறது.
• கிறிஸ்டோபர் நோலன் கடைசியாக இயக்கிய ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் 3 மணி நேரம் ஓடியது. ஆனால் ‘தி ஒடிஸி’ திரைப்படத்தின் நீளத்தை 2 மணி நேரம் 52 நிமிடங்களாக சுருக்கியுள்ளார். இதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்பம். முழுப் படமும் 70mm IMAX ஃபிலிம் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளதால், IMAX புரொஜெக்டர்கள் 3 மணி நேரத்திற்கு மேற்பட்ட ஃபிலிம் சுருள்களை இயக்க முடியாத சூழல் இருந்ததால், படத்தின் நீளத்தை குறைத்ததாக கூறப்படுகிறது.
• ‘தி ஒடிஸி’ திரைப்படம் கிறிஸ்டோபர் நோலனின் 20 ஆண்டுகால கனவுத் திட்டமாகும். 2004-ஆம் ஆண்டு வெளியான ‘டிராய்’ திரைப்படத்தை முதலில் நோலன்தான் இயக்கவிருந்தார். அது நடக்காத நிலையில், ஒரு பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆசை, தற்போது ‘தி ஒடிஸி’ மூலம் நிறைவேறியுள்ளது.
• தனது படங்களில் பின்னணி இசைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும் நோலன், இந்தப் படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியுள்ளார். ‘தி ஒடிஸி’ திரைப்படத்தின் இறுதியில் வரும் எண்ட் கிரெடிட்ஸ் பாடலின் வரிகளை அவரே எழுதியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
• வழக்கம்போல கிரீன் மேட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், இயற்கையான இடங்களிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கடலில் நடைபெறும் காட்சிகளுக்காக 115 அடி மரக்கப்பலை நடுக்கடலுக்கே கொண்டு சென்று படமாக்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடும் அலைகளால் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டபோதும், காட்சிகளின் எதார்த்தத்திற்காக அவற்றையும் நோலன் பதிவு செய்துள்ளார்.
• திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படப்பிடிப்பை முடிப்பதில் பெயர் பெற்ற நோலன், இந்தப் படத்திற்காக 100 நாட்கள் திட்டமிட்டிருந்தாலும், வெறும் 91 நாட்களிலேயே முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார். இதற்கு முன் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தையும் அவர் 57 நாட்களில் முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
• IMAX கேமராக்கள் அதிக எடையும், அதிக சத்தமும் எழுப்புவதால் நேரடி வசனப் பதிவு சிரமமாக இருக்கும். இதனால், ‘தி ஒடிஸி’ திரைப்படத்திற்காக எடை குறைவான, சத்தமில்லாத புதிய IMAX கேமரா தொழில்நுட்பத்தை பிரத்யேகமாக உருவாக்கி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
• கிராபிக்ஸ் காட்சிகளை தவிர்க்கும் தனது வழக்கத்தை இந்தப் படத்திலும் நோலன் தொடர்ந்துள்ளார். கப்பல் புயலில் சிக்கும் காட்சிகளுக்காக ராட்சத நீர் விசிறிகள் மற்றும் செயற்கை அலை உருவாக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நிஜக் கடலிலேயே படமாக்கியுள்ளனர். மேலும், சில ஃபேண்டஸி கதாபாத்திரங்களுக்காக பிரமாண்ட அனிமேட்ரானிக்ஸ் பொம்மைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
• முழுப் படமும் இயற்கை ஒளியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேர கடல் காட்சிகளை 70mm IMAX கேமராவில் பதிவு செய்வதற்காக பிரத்யேக ஃபிலிம் சுருள்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் காட்சிகளுக்கு இயல்பான தோற்றத்தை வழங்கியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
—
