‘பைட் கிளப்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து, ‘மிஸ்டர் பாரத்’ என்ற புதிய திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இதில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குநர் நிரஞ்சன் இயக்கும் இந்தப் படத்தில், ‘கட்சி சேர’ புகழ் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து டப்பிங் பணிகளும் வெற்றிகரமாக முடிவடைந்ததாக வீடியோ வெளியிட்டு அறிவித்தனர். மேலும், ‘மல்லிகை மொட்டு’ என்ற படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு புரோமோ வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
