ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே வசூல் சாதனைகளால் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக முன்னேறியுள்ள இப்படம், இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் வரவேற்பு குறித்து PVR INOX நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் குமார் பிஜிலி பாராட்டுத் தெரிவித்துள்ளார். படத்தின் தொடக்க வார இறுதியில் மட்டும் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது ரஜினிகாந்தின் தனித்துவமான நட்சத்திரச் செல்வாக்குக்கும், ரசிகர்களைக் கவரும் திரைப்படங்களின் வலிமைக்கும் சான்றாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பெரிய திரையில் ஒன்றாக அமர்ந்து திரைப்படத்தை ரசிக்கும் அனுபவம் ரசிகர்களை ஒருங்கிணைப்பதாகவும், திரையரங்குகளின் முக்கியத்துவத்தை ‘ஜெயிலர் 2’ மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு தங்களுக்கு உற்சாகத்தை அளிப்பதாகவும், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்கு அழைத்துவரும் தரமான படங்களின் மீது தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சஞ்சீவ் குமார் பிஜிலி தெரிவித்துள்ளார்.
