கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் ஆதரவால், இரண்டாவது வாரத்திலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனைத் தொடர்ந்து, படத்தின் திரையிடல் 700-க்கும் மேற்பட்ட திரைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.10 நாட்களில் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரூ.44 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு தொலைபேசியில் பாராட்டு தெரிவித்ததாக நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “செம்ம படம்… ரொம்ப ஜாலியான என்டர்டெய்னர். இப்போது இதுபோன்ற படங்கள் அரிதாகவே வருகின்றன. எல்லோரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள். குட்டி சாரா அற்புதமாக நடித்திருக்கிறார். உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் தேர்வு செய்யும் திறமை இருக்கிறது விஷ்ணு. இதுபோல இன்னும் நிறைய நல்ல படங்களை கொடுங்கள்,” என்று ரஜினிகாந்த் பாராட்டியதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
—
