அரசியல் வருகை வதந்திக்கு முற்றுப்புள்ளி… ஜூனியர் என்டிஆர் அலுவலகம் விளக்கம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர், தற்போது ‘டிராகன்’, ‘தேவரா 2’, ‘காட் ஆப் வார்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், ஆந்திராவில் கிராமப்புற மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செயல்படும் ‘ரா என்.டி.ஆர்’ என்ற சுயாதீன அமைப்பு, ‘ஊரு வாடா’ என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதையே ஜூனியர் என்டிஆரின் அரசியல் வருகைக்கான அடித்தளமாக சமூக வலைதளங்களில் சிலர் பரப்பத் தொடங்கினர். குறிப்பாக, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்குவதற்கு முன்பு மேற்கொண்ட மக்கள் நலப் பணிகளுடன் இதை ஒப்பிட்டு பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டன.மேலும், வரும் ஜூலை 18-ஆம் தேதி ஜூனியர் என்டிஆர் தனது அரசியல் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும், பல இடங்களில் அவரை ‘சிஎம் என்டிஆர்’ என வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

இந்த சூழலில், ஜூனியர் என்டிஆரின் அலுவலகம் அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜூனியர் என்டிஆருக்கும் ‘ரா என்.டி.ஆர்’ அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், அது முற்றிலும் வேறு நபரால் நடத்தப்படும் அமைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த அமைப்பை ஜூனியர் என்டிஆருடன் தொடர்புபடுத்தி யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஜூனியர் என்டிஆர் சார்பில் மேற்கொள்ளப்படும் சமூக சேவைகள், மக்கள் நலத்திட்டங்கள் அல்லது ஏதேனும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனைத்தும் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக மட்டுமே வெளியிடப்படும் என்றும், சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வதந்திகளை பொதுமக்களும், ஊடகங்களும் நம்ப வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading