உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை மற்றும் தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை இணைந்து சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தின. ரிப்பன் கட்டிடம் அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அகதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு UNHCR மற்றும் SICCI அமைப்புகள் இணைந்து உருவாக்கிய ‘கூட்டாண்மை மன்றத்தின்’ ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ஹிப்ஹாப் ஆதி, அகதிகள் எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சிக்கல்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயர்கல்வியை வெற்றிகரமாக முடித்து வெளிவரும் நிலையில், அவர்களில் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
இடப்பெயர்வு மற்றும் முகாம் வாசிகள் என்ற சமூக அடையாளம் காரணமாகவே இளைஞர்கள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்வதாக குறிப்பிட்ட ஹிப்ஹாப் ஆதி, சமூகத்தின் தீர்ப்புகளுக்கு பயந்து பலர் தங்களது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த முடியாமல் மறைத்து வாழும் நிலை இன்றும் தொடர்வதாக வேதனை தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியின் முக்கிய தருணமாக, பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த 19 வயதான வி. திஷாதனா என்ற இளம்பெண் மேடையில் மூன்று பாடல்களைப் பாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். அவரது குரலால் ஈர்க்கப்பட்ட ஹிப்ஹாப் ஆதி, தனது அடுத்த திரைப்படத்தில் பாடுவதற்கான வாய்ப்பை மேடையிலேயே வழங்கினார். இந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் 103 அகதிகள் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் மீதான சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையுடனும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
