இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். சமீபத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சிலம்பரசன் அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர் மற்றும் அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு படக்குழு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசனின் கதாபாத்திரம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கதையின் தொடக்கத்தில் ஆண்ட்ரியா ஜெரெமையாவின் மகனாக எஸ்டிஆர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சிறுவயது காட்சிகளுக்குப் பிறகு, அவர் கேங்ஸ்டராக உருவாகும் வகையில் கதை நகரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் மூலம் ‘வடசென்னை’ மற்றும் ‘அரசன்’ திரைப்படங்களுக்கு இடையே சுவாரஸ்யமான தொடர்பை இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து படக்குழு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
