சமீபத்தில் மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் ஆகியோருக்கு தமிழக அரசு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தியது. இந்த நிலையில், அவர்களின் பெயரில் அரசு திரைப்பட விருதுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இயக்குநர்கள் சங்க பொருளாளர் பேரரசு, கே. பாக்யராஜ் பெயரில் சிறந்த கதாசிரியர் மற்றும் திரைக்கதாசிரியர் விருதுகளையும், பாரதிராஜா பெயரில் சிறந்த இயக்குநர் விருதையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே தமிழக அரசு திரைப்பட விருதுகளை வழங்கி வரும் நிலையில், அந்த விருதுகளிலேயே இந்த இரு ஜாம்பவான்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்யராஜின் வீட்டுத் தெருவுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று நடிகர் கூல் சுரேஷும் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் சார்பில் அரசிடம் விரைவில் அதிகாரப்பூர்வ கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளதாகவும், இரு இயக்குநர்களுக்குமான நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்ற விருப்பமும் திரையுலகில் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
