தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் சுகுமாரன், நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார். ‘லூசிபர்’, ‘ப்ரோ டாடி’, ‘எம்புரான்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தில் வில்லனாக நடித்துவருகிறார். மேலும், ‘சலார் 2’, ‘கலிபா’ உள்ளிட்ட பல முக்கிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், பிரித்விராஜ் நடித்துள்ள புதிய திரைப்படமான ‘ஐ நோபடி’ படத்தை, ‘ரோஷாக்’ பட இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கியுள்ளார். சமீர் அப்துல் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில், பிரித்விராஜுடன் இணைந்து நடிகை பார்வதி திருவோத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே ‘என்னு நிண்டே மொய்தீன்’, ‘மை ஸ்டோரி’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, தற்போது மீண்டும் ‘ஐ நோபடி’ மூலம் ரசிகர்களை சந்திக்கிறது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரித்விராஜ் தயாரித்துள்ளார். அவரது மனைவி சுப்ரியா மேனனும் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘அனிமல்’ படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரெய்லர், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பிரித்விராஜின் மிரட்டலான தோற்றத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தணிக்கை வாரியம் ‘ஐ நோபடி’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 13 வயதிற்கு மேற்பட்டோர் இப்படத்தை திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம். இதனைத் தொடர்ந்து, படக்குழு தற்போது படத்தின் ரிலீஸ் டீசரையும் வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற 9-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
