சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் டேனியல் பாலாஜி. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பிகில், என்னை அறிந்தால் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், வடசென்னை திரைப்படத்தில் நடித்த ‘தம்பி’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
2024-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தது திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. இந்த நிலையில், வடசென்னை கதைக்களத்தைத் தொடர்ந்து உருவாகி வரும் அரசன் திரைப்படத்தில் ‘தம்பி’ கதாபாத்திரம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, டேனியல் பாலாஜியின் கதாபாத்திரத்திற்கு புதிய நடிகரை தேர்வு செய்யாமல், கதையிலேயே அந்தக் கதாபாத்திரம் உயிரிழந்ததாகக் குறிப்பிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
