‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் எப்படி இருக்கிறது? – திரைவிமர்சனம்!

முதல் பாகத்தில் காதலர்களாகவும், புதுமண தம்பதிகளாகவும் வந்த விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தி 2 திரைப்படத்தில் பெற்றோர்களாக புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடங்குகிறார்கள். அரசு வேலை மற்றும் குஸ்தி போட்டிகளை சமநிலைப்படுத்தி வாழும் ஐஸ்வர்யா லட்சுமி, குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வீட்டை கவனிக்கும் ஹவுஸ் ஹஸ்பண்டாக விஷ்ணு விஷால் ஆகியோரின் வாழ்க்கையில் எதிர்பாராத சிக்கல்கள் உருவாகுகின்றன. போட்டியில் ஏற்பட்ட தோல்வி, கணவன்-மனைவி இடையேயான மனக்கசப்பு, விவாகரத்து வரை செல்லும் உறவு என கதை நகர்கிறது. இறுதியில் இருவரும் மீண்டும் இணைந்தார்களா, ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் வெற்றி பெற்றாரா என்பதே படத்தின் மையக்கரு.

முதல் பாகத்தில் துடுக்கான இளைஞராக இருந்த விஷ்ணு விஷால், இந்த முறை பொறுப்பான குடும்பத் தலைவராக மிகவும் இயல்பாக நடித்துள்ளார். வீட்டுப் பொறுப்புகளை ஏற்று சமையல் செய்வது, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அக்கம் பக்கத்து பெண்களுக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுப்பது போன்ற காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது. மனைவியின் வெற்றிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் கதாபாத்திரத்தை எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருப்பது படத்தின் பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக, கருணாகரன் உருவாக்கும் சந்தேக சூழ்நிலைகளிலும், குடும்ப பாசம் வெளிப்படும் காட்சிகளிலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி, முதல் பாகத்தை விட இந்த முறை குடும்பப் பெண்ணாக அமைதியான தோற்றத்தில் வந்தாலும், உணர்ச்சிகரமான காட்சிகளில் தனது திறமையை மீண்டும் நிரூபிக்கிறார். மகளின் மீது கொண்ட பாசம், கணவர் மீது ஏற்படும் பொறாமை, தோல்வியால் உருவாகும் மனஅழுத்தம் மற்றும் கிளைமாக்ஸ் குஸ்தி காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டைப் பெறுகிறது.

டீச்சராக வரும் மோக்ஷா தனது தோற்றம் மற்றும் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கருணாகரன், முனிஷ்காந்த், கருணாஸ், லிஸி ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களில் நன்றாகப் பொருந்தியுள்ளனர். இறுதியில் நீதிபதியாக சிறிய தோற்றத்தில் வரும் ரம்யா கிருஷ்ணனும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். யோகி பாபுவின் நகைச்சுவையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. குறிப்பாக விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியின் மகளாக நடித்துள்ள சிறுமி சாராவின் இயல்பான நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் முகபாவனைகள் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக அமைகின்றன.

முதல் பாதி லேசான நகைச்சுவையுடன் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் கதை வேகம் பெறுகிறது. கிளைமாக்ஸுக்கு முந்தைய அரை மணி நேரம் முழுக்க நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் குஸ்தி போட்டி காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. பாடல்கள், சண்டைக் காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவாளர் பாஸ்கரனின் காட்சியமைப்பு படத்திற்கு அழகை கூட்டுகின்றன. ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்துள்ளது.

கணவன்-மனைவி உறவு, ஈகோ, விட்டுக்கொடுத்தல், குடும்ப பாசம் போன்ற பழக்கப்பட்ட கதைக்களத்தை நகைச்சுவையுடன் சொல்ல முயன்றுள்ள இயக்குநர், எந்தவித தேவையற்ற சீரியஸ்தனமும் இல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் சிரித்தபடியே ரசிக்கக்கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக கட்டா குஸ்தி 2 திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading