‘கிடா’ படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் ரா. வெங்கட் அடுத்ததாக ஜீவா நடிப்பில் ‘தகப்பன்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘மாமன்’, ‘கருடன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க, மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளைப் பேசும் குடும்பத் திரைப்படமாக அமைந்துள்ளது. மதுரை மேலூர் அருகேயுள்ள மேலவளவு கருப்புக் கோவிலில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், அதே இடத்தில் இறுதிக்கட்ட இரவு நேரக் காட்சிகளும் படமாக்கப்பட்டன. மொத்தம் 40 நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ள ‘தகப்பன்’ படத்திற்கு தற்போது தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
