போலீஸ் அதிகாரியான நட்டி விசாரிக்கும் இரட்டை மர்ம மரண வழக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘டார்க்’. வீட்டு உரிமையாளர் பாக்யராஜ் உயிரிழந்த நிலையில், அருகில் இரத்தக் காயங்களுடன் கிடக்கும் அஜய் கார்த்தி திடீரென கண் விழித்து நட்டியின் பெயரைச் சொல்லி, “நீ இங்கிருந்து போய்விடு” என எச்சரித்துவிட்டு கோமா நிலைக்கு செல்வதிலிருந்தே படம் பரபரப்பாக தொடங்குகிறது. அந்த மர்மத்தின் பின்னணியை கண்டறிய நட்டி மேற்கொள்ளும் விசாரணையே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வரும் அஜய் கார்த்திக்கு, பேச்சுலர் என்பதால் வீடு கிடைக்காத சூழல் உருவாகிறது. இறுதியில், தனது ரூம்மேட்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பாக்யராஜின் வீட்டில் அவர் தங்குகிறார். அதன் பின்னர் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள், இரவு நேரங்களில் தானாக ஒலிக்கும் பாடல்கள், மனநல பிரச்சினைகள், மர்மமான காட்சிகள் என கதை ஹாரர் மற்றும் சைக்காலஜிக்கல் திரில்லர் பாணியில் நகர்கிறது.
அஜய் கார்த்தி, ஹீரோயிசம் இல்லாத சாதாரண இளைஞராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, அச்சம், பதற்றம், மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மையால் தவிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது. இருப்பினும், அவரது கதாபாத்திரத்தைச் சுற்றிய பல கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் இல்லாதது படத்தின் பலவீனமாக அமைந்துள்ளது.
பாக்யராஜ் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பால் மனதில் நிற்கிறார். குடும்பச் சுமைகள், கடன் பிரச்சினைகள் குறித்து பேசும் காட்சிகள் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளன. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நட்டி, திரைக்கதையை முன்னெடுத்து செல்லும் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அஞ்சனா நேத்ரன் மற்றும் இந்துமதி ஆகியோரின் கதாபாத்திரங்களும் கதையின் திருப்பங்களில் முக்கிய பங்காற்றினாலும், அவர்களுக்கு போதிய திரைநேரம் வழங்கப்படவில்லை.திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முயன்றாலும், சில குழப்பங்கள் நீடிக்கின்றன. காட்சிகளை முழு கவனத்துடன் பார்த்தால்தான் கதையின் அடுக்குகள் புரியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் பேயை நேரடியாகக் காட்டாமல் பயத்தை உருவாக்கிய விதம் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், அதிகப்படியான சிக்கலான திரைக்கதை அனைவரையும் திருப்திப்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
