‘ஹார்டின்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் தமிழ் உணவகம் நடத்தி வரும் இளைஞரான சனந்த், அங்கு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இமயாவுடன் நட்பாக பழகுகிறார். அந்த நட்பு நாளடைவில் காதலாக மாற, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் நிகழும் ஒரு விபத்தால், சனந்த் தனது வாழ்க்கையின் சில ஆண்டுகால நினைவுகளை மட்டும் இழந்து விடுகிறார். குறிப்பாக இமயாவை காதலித்த சம்பவங்களும், ராஜஸ்தானில் நடந்த நிகழ்வுகளும் அவரது நினைவிலிருந்து முற்றிலும் அழிந்து விடுகின்றன. அதே நேரத்தில், தனது கல்லூரி கால காதலியான மடோனா செபாஸ்டியனை தேடி பழைய நினைவுகளுடன் ஊட்டிக்குச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து இமயாவும் அங்கு வர, அதன் பின்னர் பல எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இறுதியில் சனந்த் யாருடன் இணைகிறார் என்பதே ‘ஹார்ட்’ திரைப்படத்தின் கதை. முக்கோண காதல் கதையை நினைவிழப்பு என்ற அம்சத்துடன் இணைத்து, வித்தியாசமான முறையில் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிஷோர் குமார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் தொடங்கும் காட்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தானின் கோட்டைகள், நகரத்தின் அழகிய பின்னணிகள் உள்ளிட்டவை திரையில் ரசிக்க வைக்கின்றன. நண்பரான வாட்ஸ்அப் மணியுடன் இணைந்து உணவகம் நடத்தும் கதாநாயகன், அங்கு உணவருந்த வரும் கதாநாயகி மற்றும் அவரது தோழிகளுடன் பழகுவது, நட்பு காதலாக மாறுவது போன்ற காட்சிகளுடன் முதல் பாதி வண்ணமயமாகவும் இளைய தலைமுறையை கவரும் விதமாகவும் நகர்கிறது. இருப்பினும், அந்த பகுதியில் புதுமை அதிகமாக இல்லாதது குறையாக உணரப்படுகிறது. விபத்திற்குப் பிறகு கதையின் இரண்டாம் பாதி பெரும்பாலும் ஊட்டியில் நடைபெறுகிறது. அங்கு கதாநாயகன், இரண்டு கதாநாயகிகளுக்கு இடையிலான காதல் மோதல், உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் என கதை வேறு திசையில் பயணிக்கிறது.

இதற்கு முன் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த சனந்த், இந்தப் படத்தில் முழுமையான கதாநாயகனாக நடித்துள்ளார். முதல் பாதியில் சற்றே இறுக்கமான நடிப்பை வெளிப்படுத்தும் அவர், காதல் மலர்ந்த பிறகு இயல்பாக மாறுகிறார். இரண்டாம் பாதியில் நினைவிழப்பு மற்றும் பழைய நினைவுகளுக்கிடையிலான குழப்பத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது. இருந்தாலும், காதல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சில முக்கியமான காட்சிகளில் இன்னும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. காதல் திரைப்படமாக இருந்தபோதிலும், அவருக்கான நினைவில் நிற்கும் காதல் பாடல்கள் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. அதே நேரத்தில் தேவையற்ற ஆக்ஷன் காட்சிகள் இல்லாதது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

கதையை முன்னெடுத்து செல்லும் முக்கியமான கதாபாத்திரமாக இமயா நடித்துள்ளார். முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகளான அவர், ஐடி ஊழியர், தோழி, காதலி என பல பரிமாணங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தனது காதலுக்காக போராடும் காட்சிகளிலும், சில உணர்ச்சிப்பூர்வமான தருணங்களிலும் அவரது வெளிப்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. வழக்கமான சினிமா கதாநாயகி போல இல்லாமல், அடுத்த வீட்டுப் பெண் போன்ற இயல்பான தோற்றமும் நடிப்பும் அவருக்கு பலமாக அமைந்துள்ளது. கதாநாயகனின் கல்லூரி தோழி மற்றும் முன்னாள் காதலியாக வரும் மடோனா செபாஸ்டியன், தனது ஸ்டைலான தோற்றம் மற்றும் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காதல் முறிவை ஏற்றுக்கொள்ளும் காட்சியில் அவரது நடிப்பு மனதை தொடுகிறது. இருப்பினும், இரண்டாம் பாதியில் அவருக்கான முக்கியமான காட்சிகள் இருந்தும், அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அவரை மையப்படுத்திய கிளைமாக்ஸ் பகுதியும் அவசரமாக முடிவடைவது ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

கதாநாயகனின் நண்பராக வரும் வாட்ஸ்அப் மணி, நகைச்சுவை காட்சிகள் மூலம் ஓரளவு சிரிப்பை ஏற்படுத்துகிறார். ஆனால், அவரது கதாபாத்திரத்தையும் இயக்குநர் முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. கதாநாயகனின் தாயாக சில காட்சிகளில் தோன்றும் முன்னாள் கதாநாயகி பிரகதி தனது அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்த்தாலும், அவருக்கும் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. மற்ற கதாபாத்திரங்களும் பெரிய அளவில் மனதில் பதியவில்லை. முழு கதையும் கதாநாயகன் மற்றும் இரண்டு கதாநாயகிகளைச் சுற்றியே நகர்வதால், புதிய திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் குறைவாக இருப்பது படத்தின் வேகத்தை பாதிக்கிறது. ‘பிரேமம்’ படப் புகழ் ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு பலம் சேர்க்கிறது. பாடல்களில் சில மட்டும் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading