‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் புதிய தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் ‘யூத்’ படத்தின் இயக்குநரும் நடிகருமான கென் கருணாஸ் ஒரு பாடலை எழுதியுள்ளதாகவும், அந்த துள்ளலான பாடலை நடிகர் சூர்யாவே பின்னணி பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘அஞ்சான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏக் தோ தீன்’ பாடலுக்குப் பிறகு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் மீண்டும் சூர்யா பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலின் வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘பட்டாம்பூச்சி’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாக உள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் இந்தப் பாடல், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் எனர்ஜிடிக் டான்ஸ் நம்பராக இருக்கும் என்று ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து, சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகுந்த உற்சாகத்துடன் இந்த செய்தியை வரவேற்று வருகின்றனர்.
