சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவர் மறைந்த செய்தியைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் மகன் சாந்தனு உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களுக்கான என் நன்றியை 24/7-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? என் உயிர் இருக்கும் வரை நீடிக்கும் நன்றியிது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “என் திருமணத்திற்கு தாலியை வழங்கி என் வாழ்வின் மகிழ்ச்சியான நாளை தொடங்கிவைத்தீர்கள். அதற்கே இன்னும் முழுமையாக நன்றி சொல்ல முடியவில்லை. அதற்குள் என் வாழ்க்கையின் மிகப்பெரிய துயரமான நாளான என் தந்தையின் மறைவின் போது ஆறுதல் சொல்ல நீங்கள் நேரில் வந்தீர்கள். பதவியின் பெருமையை ஒதுக்கிவிட்டு மண்டியிட்டு என் அம்மாவிடம் ஆறுதல் கூறிய அந்த தருணம் என்னை மிகவும் நெகிழச் செய்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “ஒரு கலைஞனுக்கு மரணத்திலும் மரியாதை கிடைப்பது மிகப்பெரிய பாக்கியம். உங்கள் பெயருக்கு ஏற்ற கம்பீரமான அரசு மரியாதையை என் தந்தைக்கு வழங்கியதை என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன். இப்போது இதற்கு மேல் என்ன சொல்வது? இதயம் கனிந்த நன்றி முதல்வர் அண்ணா விஜய்” என்று சாந்தனு தனது பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
