இயக்குநராகவும், நடிகராகவும் தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்த படைப்பாளி கே.பாக்யராஜ், இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகை மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் குழப்பங்கள் குறித்து நடிகை ராதிகா தனது சமூக வலைதள பதிவின் மூலம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், சிறந்த படைப்பாளி, ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதிய எழுத்தாளர், திரைப்பட உலகில் தனித்துவமான தரத்தையும் புதிய எல்லைகளையும் உருவாக்கிய கலைஞர், எண்ணற்ற நகைச்சுவை தருணங்களையும் இனிய பணிப் பயணங்களையும் தன்னுடன் பகிர்ந்து கொண்டவர் பாக்யராஜ் என குறிப்பிட்டுள்ளார். அவரது திடீர் மறைவு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மறைந்தவருக்கு அமைதியான சூழலில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட வேண்டிய தருணம், அஞ்சலி செலுத்த வந்தோரின் உணர்வுகளை மதிக்கும் புனிதமான நிகழ்வாக இருக்க வேண்டிய நிலையில், அது ஒரு காட்சிக்கூடமாக மாறியிருப்பது மிகவும் வேதனையளித்ததாக ராதிகா குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சூழல்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, அரசாங்கமும் திரைப்படத் துறையும் இணைந்து உரிய நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுத்து, ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், அதுவே மறைந்த கலைஞரின் ஆன்மாவுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
—
