‘கான் சிட்டி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் மங்களூரில் ஹோட்டல் தொழில் செய்து வரும் ஒரு குடும்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கணவன் – மனைவியாக அர்ஜுன் தாஸ், அன்னா பென், அன்னா பென்னின் தாயார், அண்ணனாக வடிவுக்கரசி, யோகி பாபு மற்றும் சக்கர நாற்காலி உதவியுடன் பள்ளிக்குச் செல்லும் மகன் என அமைதியான குடும்ப உறுப்பினர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். ஆனால், சில காட்சிகளுக்குப் பிறகு அர்ஜுன் தாஸின் மகன் கடத்தப்படுகிறான். அதன்பின் 2017-இலிருந்து 2010-ஆம் ஆண்டுக்குக் கதை பின்னோக்கி சென்னைக்குச் செல்கிறது. இவர்கள் சாதாரண குடும்பம் அல்ல என்பதும், ஒவ்வொருவரும் மிகப்பெரிய மோசடிகளில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவருகிறது. உண்மையில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் யார்? அந்த சிறுவன் எதற்காகக் கடத்தப்படுகிறான்? என்பதே மீதமுள்ள கதையாக அமைந்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியதுடன், தயாரித்தும் உள்ளார். சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் வகையைச் சேர்ந்த இந்த திரைப்படத்தில், தொடக்கம் முதல் இறுதி வரை எதிர்பார்க்கப்படும் சுவாரஸ்யம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை காரணமாக சில காட்சிகள் நல்ல கைதட்டல்களையும் பெறுகின்றன. குறிப்பாக, அர்ஜுன் தாஸ் பணியாற்றும் மின்வாரிய அலுவலகத்தில் அவருக்கும் விடிவி கணேஷுக்கும் இடையிலான காட்சிகளும், தாய் – மகனாக வரும் வடிவுக்கரசி மற்றும் யோகி பாபுவுக்கான காட்சிகளும் சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

நகைச்சுவை கலந்த திரில்லர் கதையாக நகர்வதால் பல காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் யோகி பாபு, மின்வாரிய ஊழியராக இருந்து மக்களின் மின்சாரக் கட்டணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்கும் அர்ஜுன் தாஸ், வாடகைக்கு வீடுகளை எடுத்து லீசுக்கு விட்டுப் பணம் மோசடி செய்யும் அன்னா பென் என ஒவ்வொரு கதாபாத்திரமும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளதால், கதையில் எங்கும் தொய்வு ஏற்படாமல் படம் நகர்கிறது. இருப்பினும், மெதுவான சிரிப்பை வரவழைக்கும் காட்சிகளை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருந்தால், அவை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளாக மாறியிருக்கும்.

இடைவேளைக் காட்சியும் கிளைமாக்ஸும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றால், இந்த திரைப்படம் அதிக கவனம் பெறும் படமாக மாறும் வாய்ப்புள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது, இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது. நடிகர் யோகி பாபுவின் நகைச்சுவைக் காட்சிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதாரச் சிரிக்க வைக்கின்றன. காவல்துறை அதிகாரியாக நடித்த நடிகர், அர்ஜுன் தாஸின் நண்பராக வரும் சதா கதாபாத்திரம் மற்றும் சிறுவனாக நடித்துள்ள பையனும் தங்களுக்கு வழங்கப்பட்ட காட்சிகளை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.

இசையமைப்பாளர் சான் ரோல்டனின் பின்னணி இசை, சஸ்பென்ஸ் காட்சிகளுக்கான எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளது. உருவாக்க ரீதியாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும், அருண் மோசஸின் படத்தொகுப்பும் வீடு மற்றும் அலுவலகத்தில் மீண்டும் மீண்டும் நடைபெறும் காட்சிகளைக் கூட சலிப்பில்லாமல் ரசிக்கும்படி அமைத்துள்ளன.

‘ஏமாறாதே, ஏமாற்றாதே’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை முழுமையாக ஏற்படுத்தவில்லை. மாறாக, இந்த நால்வரும் தங்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதிலிருந்து மீள என்னென்ன செய்கிறார்கள் என்பதையே மையமாகக் கொண்டு கதை நிறைவடைகிறது. உணர்ச்சி சார்ந்த அம்சங்களை இன்னும் வலுப்படுத்தியிருக்கலாம். இருப்பினும், ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படமாக இது திரைக்கு வந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading