தமிழ் சினிமாவில் அழியாத தடம் பதித்த இரண்டு மாமேதைகள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன். இந்த இரு ஜாம்பவான்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இசையமைப்பாளர் இளையராஜா ஒரு வீடியோவை வெளியிட்டு அவர்களுக்கு தனது மரியாதையையும் புகழ் அஞ்சலியையும் செலுத்தியுள்ளார்.
அதில், ‛‛தமிழ் மொழியின் கவிதைக்கும் இசைக்கும் அழியாத பெருமை சேர்த்த இரண்டு பேரறிஞர்கள் அவர்கள். அவர்களின் சொற்களும் இசைச் சுரங்களும் என்றும் நமது இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‛‛உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் கவிஞர் கண்ணதாசன் அய்யாவையும், எம்.எஸ்.வி அண்ணனையும் கொண்டாடி வருகின்றனர். நீங்கள் அனைவரும் இன்று அவர்களை கொண்டாடுகிறீர்கள். ஆனால் நான் இசையோடு வாழ்வதால், அவர்களை நினைவுகூராமல் என் நாளையோ, என் பணியையோ தொடங்க முடியாது. என் நினைவுகளில் மட்டுமல்ல, அனைவரது மனங்களிலும் அவர்கள் நிரந்தர இடம் பிடித்துள்ளனர். அவர்களது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
