தற்போது காதலோ, திருமணமோ இல்லை… சினிமா மட்டுமே – நடிகர் அர்ஜூன் தாஸ்!

இயக்குநர் ஹரிஷ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் அர்ஜுன் தாஸ், சினிமா, காதல், திருமணம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “நான் நடித்த ஒவ்வொரு படமும் வெளியான பிறகு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்துகளை கவனமாக கேட்பேன். பலரும் நேரடியாக வந்து தங்களது பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த கருத்துக்கள் என்னுடைய அடுத்தடுத்த கதைத்தேர்வுகளிலும், நடிப்பிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ரசிகர்கள் என்ன மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் அவற்றின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது” என்றார்.

மேலும் கான் சிட்டி திரைப்படம் குறித்து பேசும்போது, “இந்த படம் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம். குடும்ப உறவுகள், வாழ்க்கை அனுபவங்கள், நகைச்சுவை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கக்கூடிய படமாக இருக்கும்” என தெரிவித்தார். காதல் மற்றும் திருமணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “என்னைப் பற்றிய திருமணச் செய்திகள் எங்கிருந்து வந்தது என்பதே தெரியவில்லை. குடும்பத்தினரும் உறவினர்களும் கூட அதைப் பற்றி கேட்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் உண்மையில் தற்போது காதலோ, நிச்சயதார்த்தமோ, திருமணத் திட்டமோ எதுவும் இல்லை. தற்போது என் கவனம் முழுவதும் சினிமாவில் மட்டுமே உள்ளது” என்று விளக்கமளித்தார்.

மேலும், “மாஸ்டர் படத்தில் தமிழக முதல்வர் விஜய்யுடன் நடித்திருக்கிறேன். அவரை நேரில் சந்தித்து வாழ்த்த முடியவில்லை என்றாலும் சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். அதேபோல் குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அனுபவமும் மறக்க முடியாதது. கார் பந்தயங்களில் அவர் தற்போது கவனம் செலுத்தி வருவதால் அவரது அடுத்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றும் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading