இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள புதிய இணையத் தொடரான ‘இசகப்பட்டினம்’ தொடரின் வெளியீட்டு தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி மற்றும் கிரைம் திரில்லர் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத் தொடரை இயக்குநர் கேரி பி.ஹெச். இயக்கியுள்ளார். விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த தொடர், ஓடிடி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடருக்கான திரைக்கதையை பிரசாந்த் ரகதி எழுதியுள்ள நிலையில், வசனங்களை தாஜுதீன் சையத் எழுதியுள்ளார். தமடா மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராகுல் தமடா மற்றும் சாய்தீப் ரெட்டி போரா ஆகியோர் இந்தத் தொடரை தயாரித்துள்ளனர். மேலும், இந்த தொடரில் சுனில், நரேஷ் அகஸ்தியா, மெரின் பிலிப், ரோகினி, ரவி வர்மா மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக ‘வட சென்னை’ மற்றும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படங்களில் சமுத்திரக்கனி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருந்த நிலையில், மூன்றாவது முறையாக ‘இசகப்பட்டினம்’ தொடரில் இணைந்து நடித்துள்ளனர். சித்தாந்தம் மற்றும் சமூக நீதி தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே உருவாகும் மோதலை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 அத்தியாயங்களைக் கொண்ட இந்த இணையத் தொடர், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
—
